சேவற்கட்டு சிறப்பு கட்டுரை

உணவு, கலை, இலக்கியம், விளையாட்டு என நம்ம ஊர் பாரம்பரிய அடிப்படைகளை ஆவணப்படுத்தும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக நம்ம ஊர் சேவற்கட்டு பற்றிய குறிப்புகளை இந்த ஏட்டில் ஆவணப்படுத்தி உள்ளோம்.

சேவற்கட்டின் அடிப்படைக் காரணி:

வேட்டைச் சமூகமாக உணவினைச் சேகரித்து வாழ்ந்த குறிஞ்சி முல்லை நில மக்கள். மருத நிலத்தில், உணவு உற்பத்திச் சமூகமாக ஒரு இடத்தில் நிலை பெற்று வாழத் துவங்கினார்கள்.  இதன் ஒரு பகுதியாக தங்கள் விவசாயத்திற்கான  உழைப்பிற்கும், உணவிற்கும், பாதுகாப்பிற்கும் பயன்பெறும் விலங்குகளை வளர்ப்பு விலங்குகள் ஆக்கினார்கள்.  அதாவது காடுகளில் இயற்க்கை தேர்ச்சி முறையில் பரிணாமம் அடைந்து வளர்ந்து வந்த பயிர்கள், செடிகள், விலங்குகள் அனைத்தையும் மக்கள் தமது சுயபராமரிப்பில், தனது கட்டுப்பாட்டில் வளர்க்கத் துவங்கினர். இதனை ஆங்கிலத்தில் “Domestication” என்று குறிக்கிறார்கள்.

காடுகளிலும், மலைகளிலும் இருந்த இயற்கைத் தேர்ச்சி (Natural Selection) முறை இங்கு இல்லாமல் போனது. அங்கு இயல்பில் பலமான மற்ற ஆண்களை வெல்லும் ஆண் மிருகமே கூடும் வாய்ப்பினைப் பெற்று அடுத்த தலைமுறைக்கு வித்திடுகிறது. ஆனால் மனிதன் சுயவளர்ப்பில் கொணர்ந்த விலங்குகளின் பெருக்கத்தில்  இந்த இயற்கைத் தேர்ச்சி முறை இல்லாமல் போனதால் அவை பலவீனமாகத் துவங்கின.  இதனைக் கையாளவே செயற்கையான தேர்ச்சி முறையினை மருத நில மக்கள் கையாளத் துவங்கினர்.  இதன் காரணமாகவே ஏறு தழுவுதல், கிடா முட்டு, சேவல் கட்டு போன்ற விளையாட்டுக்கள் நமது வாழ்வியலின் ஒரு பகுதியானது.

இவ்விளையாட்டுக்களில் வெல்லும் பலமான விலங்குகள் மட்டுமே இணை சேர்க்கப்பட்டு அடுத்த தலைமுறையை உருவாக்கின.  கூடவே போர்கள் இல்லாத காலகட்டங்களில் தமது போர் குணம் மழுங்காமல் இருக்க இவ்விளையாட்டுக்கள் பெரிதும் பயன்பட்டன.

இவ்வகையில் உணவிற்காக வளர்ப்பு விலங்குகளாக ஆக்கப் பெற்ற கோழி, சேவல்களை செயற்கை தேர்ச்சி முறையில் பலமான இனமாகத் தொடர உருவாக்கப் பெற்றதே சேவற்கட்டு விளையாட்டு ஆகும். கிராமங்களில் இயல்பாக மேகுஞ்சு, கீகுஞ்சு என்று பேச்சு வழக்கில் சுட்டுவர்.  பொதுவாக இந்த மேகுஞ்சினை எடுத்துக் கட்டுச் சேவலுக்கு தயார் படுத்துவர்.  ஒரே அடையில்  பொறித்த குஞ்சுகள் ஆனாலும் அதில் எது மற்றவையை விட அதிக வீரியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதோ அதனை மேகுஞ்சு எனச் சுட்டி பிரித்து எடுத்து கட்டுக்குத் தயார் செய்வர்.

கட்டு வகைகள்:

சேவல் கட்டினைப் பெரும்பாலும் இருவகையாகப் பிரிக்கலாம் வெப்போர் (அ) வெத்துக்கால் சண்டை மற்றும் கத்திக்கால் சண்டை.

வெப்போர் (அ) வெத்துக்கால் சண்டை:

பெரும்பாலும் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெத்துக்கால் முறையில் சண்டை செய்வது வழக்கம்.  இரு சேவல்களும் குறிப்பிட்ட எல்லைக்குள் மோதச் செய்து எந்தச் சேவல் கடைசிவரை களத்தில் வெளியேறாமலும், மூக்கைத் தரையில் குத்தாமலும் நின்று அடிக்கிறதோ அதுவே வெற்றி பெற்ற சேவலாக அறிவிக்கப்படும். வென்றவர் பரிசுத்தொகை பெறுவர்.  இதுபோல் வெல்லும் சேவல்களைக் கொண்டு அடுத்த தலைமுறைக் குஞ்சுகளை இறக்குவர்.

கத்திக்கால் சண்டை:

பெரும்பாலும் கொங்கு பகுதிகளில் இந்தக் கத்திக்கால் சண்டை

பிரபலமாக நடைபெறுகிறது.  வருடம் ஒரு முறை பொங்கல் சமயத்தில் பூலாம்வலசு மற்றும் கோவிலூரில் மிகப்பெரும் பரப்பளவில் இந்தச் சண்டை நடைபெறும்.  மிக்க கூர்மையான ஈட்டி போன்ற முனைக் கத்திகளை காலில் கட்டி பறக்க விடுவர்.  கத்திக் காயம் பட்டு வீழும் சேவல் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவரிடம் அளிக்கப்படும். இதில் இறக்கும் சேவலுக்கு கோச்சை என்று பெயர்.  இத்தகைய கத்திக்கால் சண்டை பல நூறு வருடங்களாக இங்கு நடந்து வந்தாலும் முகலாயர்களின் வருகைக்குப் பிறகே இவை நமது ஊரில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

வரலாற்றில் சேவற்கட்டு:

1) 64 கலைகளுள் ஒன்றாக சேவற்கட்டு குறிக்கப் படுகிறது

2) முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாக போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்ட நாடுகள் குறிப்புகள் கிடைத்துள்ளன

3) இந்தளூர் பகுதியில் கிடைத்த சேவல் நடுகல்லில் வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் “பொற்கொற்றி” என்றும் அச்சேவல் கீழச்சேரி எனும் இடத்தைச் சேர்ந்தது எனவும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

4) சிந்து சமவெளியில் சேவல் முத்திரை அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கிறது

5) தொகாப்பியம், நன்னூலில் கீழச்சேரி மேலச்சேரியில் நடைபெற்ற சேவல் சண்டை குறிக்கப்படுகிறது

  “உறைகிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரோடு சிவல்   விளையாட” – பட்டினப்பாலை

“உய்த்தனர் விடா ஆர் பிரித்து இடை களையார்   குப்பைக்   கொழித் தனிப்போர் போல” – குறுந்தொகை 305:6

பிரிவுகள்:

சேவல்கள் அதன் கால் நிறம், இறகு நிறம், மூக்கு மற்றும் கொண்டை அமைப்பினைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது.  இவற்றில் மேல்நாள் (வளர்பிறை நாட்கள்) கீழ்நாள் (தேய்பிறை நாட்கள்) என பிரித்து எந்த நாளில் எந்த வகையான சேவல் யாருடன் வெல்லும் எனும் கணக்கின் அடிப்படையில் சேவல்கள் சண்டைக்கு இடப்படும்.

வழக்குச் சொற்கள்:

கோச்சை : சண்டையில் இறந்த சேவலைக் குறிப்பது

தண்ணிக்கு எடுப்பது: 15 நிமிட சண்டைக்குப் பிறகு சேவலைக் காயங்கள் ஆற்றி மருந்திட்டு தண்ணீர் கொடுக்க எடுப்பது

முகைதல்: இரு சேவல்களை நேருக்கு நேர் வாலைப் பிடித்தபடி பரக்கத் செய்து சண்டைக்கு தயார் செய்தல்

அசில்: அசல் ரக சேவல்கள்

நடவு போடுதல்: சண்டைக்கு முன்பு சேவலை களத்தில் வைத்து எடுத்தல்

கட்டுத்துறை: கட்டுச் சேவல் கட்டி வைத்து வளர்க்கும் இடம்.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

[newsletter_subscribe_list]