துவர்ப்பு | தமிழர் உணவின் அறிவியல் – பகுதி 7

முந்தைய பகுதி)

அறுசுவைப் பட்டியலில் அதிகம் பேசப்படாத சுவை துவர்ப்பு. பெரும்பாலும் கனியாத கனிகளை அறிய துவர்ப்பு சுவை பயன்படுகிறது. துவர்ப்பு சுவைக்குள்ள ஒரு தனிச் சிறப்பு யாதெனில், நமது நாவிலும், உணவுக் குழாயிலும் உள்ள செதில் துவாரங்களைத் திறந்து மூடச் செய்து உணவுப் பாதையை சுத்தம் செய்து விடும். வேறெந்த சுவைக்கும் இல்லாத இந்த சிறப்பு துவர்ப்பிற்கு மட்டுமே உரியதாகும்.


டேனின் (Tanin) எனும் ரசாயனம் தான் துவர்ப்பு சுவைக்கான காரணம். மரப்பட்டை, கனிகளின் தோள் என தாவரங்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பது இந்தத் துவர்ப்பு சுவை தரும் டேனின் தான். எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த காய்களை பூச்சிகள் அதிகம் தாக்குவத்தில்லை. எடுத்துக்காட்டாக சேனைக் கிழங்குகள் பூச்சித் தாக்குதலுக்கு ஆட்படுவதே இல்லை. எனவே வறட்சி காலங்களிலும், பூச்சித் தோற்று காலங்களிலும் உணவுக்கான பொருளாக, துவர்ப்பு சுவை மிகுந்த சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, போன்ற காய் வகைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது.

இந்த டேனின் அதிகம் உள்ள உணவினைச் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு விடும், எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த அனைத்து காய் வகைகளும் தமிழர் சமையல் முறையில் முதலில் நீரில் வேக வைக்கப் பட்டு பிறகு சமைக்கப் பட்டன. நீரில் வேகும் பொழுது டேனின் பிரிந்து விடுவதால் துவர்ப்பு சுவை குறைந்து உண்பதற்கு ஏற்ற சுவை பெறுகிறது.


இவ்வாறு தமது நிலப்பரப்பில் கிடைக்கப் பெரும் பொருட்களைக் கொண்டு அதன் தன்மைக்கு ஏற்ப சமைத்து உண்ணும் வழிமுறைகளை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கைக்கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம்.

அதீத துவர்ப்பினைக் கொண்ட நாவல் பழத்தினைச் சுவைக்க வந்த ஒளவை “சுட்ட பழம் வேண்டுமா” எனும் கூற்றில் தமிழ் கடவுள் முருகனிடம் தோல்வியுற்றதை எண்ணி வெட்க்கி ஒளவையார் பாடிய பாடல்,

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் – பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

அதே போல் அதிக துவர்ப்பினைக் கொண்ட இன்னொரு கனியான நெல்லிக் கனியை அதியமானுக்கு வழங்கிய வரலாறும் நமது இலக்கியத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குறிப்பிடப்பட்டிருப்பது, துவர்ப்பு முதற் கொண்டு அனைத்து சுவைகளையும் பகுத்து உணவுக் கலாச்சாரத்தின் உச்சானிக் கொம்பில் வாழ்ந்து வந்த சமூகமாக நாம் திகழ்ந்துள்ளோம் என்பதற்கான சான்றாகும்.

இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என அறுசுவைகளின் அடிப்படை அறிந்து அதனைத் தமிழர்கள் எவ்வாறு தமது உணவு முறையில் பயன்படுத்தி வந்தனர் என்பதை கடந்த இதுவரை வெளிவந்த பகுதிகளில் பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் நமது சமையல் முறையையும் அதன் பின்னிருக்கும் அறிவியலைப் பற்றியும் காணலாம்.

நம்ம ஊர் சுவை மிகுந்த பண்டங்களை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

பிப்பாலி எனும் மிளகின் வரலாறும், சிறப்பும் – தமிழர் உணவின் வரலாறு பகுதி 5

(முந்தைய பகுதி)

முத்துக்கு இணையாக உலக வணிகத்தில் மதிப்பைப் பெற்றிருந்த மிளகுதான் சில நூறு வருடங்களுக்கு முன் உலகவரைபடத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. முதன் முதலில் காரத்திற்கு உகந்த பொருளாகத் தமிழர்களால் கண்டெடுக்கப் பட்டது பிப்பாலி எனும் மிளகு. மிளகின் உண்மையான தமிழ்ப் பெயர் பிப்பாலி அதன் மறுவல் தான் கிரேக்கத்தில் பிப்பர் என்றாகி இன்று ஆங்கிலத்தில் பெப்பர் என்று அழைக்கப் பெறுகிறது. தமிழில் மிளகாய் பயன்பாட்டிற்கு வந்த பின் காரத்திற்காக பயன்படுத்தப் படுவதால் பிப்பாலி பெயர் மறைந்து மிளகு என்றபெயர் பயன்பாட்டிற்கு வந்தது.


காரத் தன்மையை நெருப்புக்கு உவமைப் படுத்துவது இயல்பு. காரணம் சூடு பட்டால் உடலில் என்னென்ன சுரப்பிகள்,உணர்வுகள் வினை ஆற்றுமோ அவை அனைத்தும் காரத்திற்கும் வினை ஆற்றும். எனவேதான் காரம் எஸ்.அச்.யு (ஸ்கொபீல்டு ஹீட் யூனிட்) எனப்படும் சூட்டின் அலகினைக் கொண்டு அளக்கப் படுகிறது. இந்த இயல்பின் காரணமாக காரத் தன்மை கொண்ட பொருட்கள் பாக்டீரியாக்களைக் களைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கும். எனவேதான் மிளகாய்க் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாக்கள் களையப்பட்டு அல்சர் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் மிளகு மட்டும்தான், காரம் இருந்தாலும் அதற்கான தீயவிளைவுகள் எதுவும் அற்ற பொருள். எனவேதான் மிளகு காரத் தன்மைக்கான முதன்மைப் பொருளாகவும் உலகவணிகத்தின் முக்கியப் பொருளாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. தமிழகத்தில் மிளகாயின் பயன்பாடு சமீபத்திய காலங்களில் தான் அதிகரித்துள்ளது மிக நெடுங்காலமாக நமது உணவுமுறையில் இருந்து வருவது மிளகுதான்.

உலகின் பல்வேறு இடங்களில் மிளகு கிடைக்கப் பெற்றாலும், சரியான காரத் தன்மை கொண்ட மிளகு வகையைத் தேர்வு செய்து அதன் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்த ஒரே சமூகம் தமிழ்ச் சமூகம்தான். ஒற்றை வரியில் கூறி முடித்தாலும் இது பல நூறு ஆண்டுகள் நிகழ்த்தப் பட்ட தொடர் முயற்சியின் விளைவாகும். சிந்தனைத் திறனும், சிறந்த சமூகக் கட்டமைப்பும் கொண்ட சமூகத்தினாலேயே இதனைச் சாத்தியபடுத்த முடியும். எடுத்துக் காட்டாக இன்று அமெரிக்காவில் நிகழ்த்தப் பெரும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியக்காரணம் அங்குள்ள கட்டமைப்பு. எனவே சிறந்த கட்டமைப்பு இல்லாமல் எந்த ஒரு புது முயற்சியும் வெற்றி பெற இயலாது.


பெரும் மதிப்பு மிக்க பொருளின் உலகின் மொத்த வணிகமும் கையில் இருந்த பொழுதும் உற்பத்தியைப் பெருக்க இன்று தேயிலைத் தோட்டங்கள் அமைப்பது போல் மோனோகல்ச்சர் செய்யாமல் பெரும் இயற்கைப் புரிதலுடன் காடுகளின் ஊடாகவே மிளகின் உற்பத்தியைப் பெருக்கினர். எனவேதான் இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகிலேயே அதிகமான தாவர வகைகளைக் கொண்ட இடமாகத் திகழ்கிறது.

உலக வணிகம், இயற்கைப் புரிதலுடனான உற்பத்தி, புதிய விடயங்களின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு எனப் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னரே தேர்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததற்கு மிளகும் அதன் பிப்பாலி எனும் பெயருமே மிகப் பெரும் சான்று.

பாரம்பரிய கொல்லிமலை மிளகினைத் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் nativespecial.com இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

(அடுத்த பகுதி)

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

புளி (Tamarind) |தமிழர் உணவின் அறிவியல்-4

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர

(முந்தைய பகுதி)

பகுதி-4
புளி (Tamarind)

முந்தைய பகுதிகளில் பார்த்த இனிப்பு, உப்பு என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பின், உணவைச் சமைத்தல், சுவைப் படுத்துதல், பதப்படுத்துதல் என உணவின் அடுத்த படி நிலைகளை நோக்கி நகர்ந்தது தமிழ்ச் சமூகம். வேகவைத்து உட்கொண்டு வந்த நிலையைத் தாண்டிச் செல்ல தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் ஊன்றுகோலாக இருந்தது புளியின் பயன்பாடு. இன்றும் பல நாடுகளின் உணவு முறை வேகவைத்தல் எனும் இடத்தைத் தாண்டி நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது. என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது தமிழ்ச் சமூகம். மேலும் புளியின் அமிலத்தன்மை உணவுப் பொருட்களில் புரதம் போன்ற சத்துக்களை மூடி இருக்கும் நார்ச் சத்தினை உடைத்து உணவினை இளக்கி உடல் சீரணித்துக் கொள்ளும் நிலைக்கு உணவினை மாற்றிவிடும். எளிமையாகச் சொன்னாள் ஒரு மரக்கட்டையைப் பஞ்சு போன்று இளக்குகிறது. இத்தகைய புளியின் பயன்பாடு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே நமது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. புளிக் குழம்பு தான் உலகின் மிகப் பழமையான சமையல் முறை என்பதும் புளி ரசம் நமது உண்ணும் முறையில் ஒரு பகுதியாக செரித்தல் பொருட்டு இடம் பெற்று வருவதும் இதற்கான ஆணித்தரமான நிரூபனம்.

இது மட்டும் இன்றி புளிக்கு மற்றொரு குணமும் உண்டு, இதில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால் புளிச் சோறு நீண்ட நாள் கெடுவதில்லை. இதுவே நீண்ட பயணங்களுக்கு கட்டுச் சோறாக புளிச்சோற்றினை எடுத்துச் செல்லும் வழக்கத்தின் காரணம். புளிப்பிற்கு பயன்படுத்தப் படும் தக்காளி, எலுமிச்சை ஆகிய பழங்களை விட புளியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத் தக்கது.

புளியியைப் போன்றே மாங்காயும் புளிப்பிற்காக பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை காரணமாக மாங்காய் அதிகம் விளையும் காலங்களில் புளி விளைச்சல் இருக்காது, அதே போல் புளி விளைச்சல் காலங்களில் மாங்காய் விளைச்சல் இருக்காது. எனவே புளிக்கு மாற்றாக மாங்காய் நமது சமையல் பயன்பாட்டில் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. உணவில் புளிப்பின் சேர்க்கையின் தேவையை உணர்ந்து அதற்கான தட்டுப்பாட்டினைக் களையும் பொருட்டு நமது நிலப் பரப்பிற்கு ஏற்ப புளிப்புத் தன்மை நிரம்பிய இரு பொருட்களை அவற்றின் விளைச்சலுக்கு ஏற்ப ஒன்றுக்கு ஒன்று மாற்றாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளார்கள். இடர் மேலாண்மை (Risk Management) எனும் கருத்தாக்கத்தின் துவக்கம் இதுவெனக் கருதலாம். இத்தகைய அறிவிற்கான அடிப்படை அனுபவமா, அறிவியலா எனும் கேள்விக்கான விடை எதுவாக இருப்பினும், சீரிய சிந்தனைத் திறனும், சமூக அமைப்பும் கொண்ட ஒரு இனக் குழுவினாலேதான் இத்தகையதொரு விடயத்தை வழக்கப் படுத்த முடியும் என்பது உறுதி.

அடுத்த பகுத்தியில் உலகின் வரை படத்தை நிர்ணயித்த மிளகைப் பற்றிக் காணலாம்.

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

உப்பு (SALT) |தமிழர் உணவின் அறிவியல்-3

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” ஓர் ஆவணத் தொடர்

(முந்தைய பகுதி)

 நமது வாழ்வியலில் உப்பின் ஆரம்பம்:

உப்பு, உலகின் முதல் வணிகப் பொருள். உயிர் வாழ்விற்கு உப்பு அத்தியாவசியம். நமது உணர்வுகளைக் கடத்தும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கான காரணி உப்பு தான். எந்த சமூகம் உப்பின் தேவையை உணர்ந்து உற்பத்தி செய்யத் துவங்கியதோ அவையே நிலைத்து வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்றது. எனவேதான் உலகின் பழமையான நாகரீகங்கள் அனைத்தும் ஆறும், கடலும் சேரும் டெல்டா பகுதிகளில் வளர்ந்தன. எகிப்தின் நைல் ஆற்றுப் படுகையும், தமிழகத்தின் காவேரி ஆற்றுப் படுகையும் தான் இவர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு அடிப்படை.

முதலில் கடல் நீரை நேரடியாகத் தங்களின் உப்பின் தேவைக்குப் பயன்படுத்தினர் பிறகு அதனை நெய்து உப்புக் கல்லாக்கும் வழிமுறைகள் மெல்ல பயன்பாட்டிற்கு வந்தன. உலகின் முதல் உப்பளம் நமது வீட்டுத் தாளிப் பானைகள் தான். தாளிப் பானைகள் அடுக்குகளாக நமது வீடுகளில் கண்டிருப்போம், அதில் மேல் பானை எப்பொழுதும் உப்புப் பானையாகத் தான் இருக்கும். மேலும் முதல் பானை

மூடி இல்லாத பானையாகத்தான் இருக்கும். அதில் கடல் நீர் நிரப்பி வைத்து அது காற்றில் மெல்லக் காய்ந்து உப்புக்கு கட்டியாகி விடும், பிறகு அதனை சமையலுக்குப் பயன்படுத்தினர். இந்த முறை உலகின் வேறெந்த பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு நிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு உப்பின் தேவை இருந்த காரணத்தால் உப்பளங்கள் உருவாக்கப் பட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து உப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

 நாகரிக மாற்றத்தில் உப்பின் பங்கு: 

உப்பின் அத்தியாவசியத் தேவையினால் உலகின் முதல் வணிகப் பொருளானது உப்பு. கடல் கடந்து உப்பினை பல நாடுகளுக்கு அனுப்பிய முதல் அரசு பாண்டியர்களினது ஆகும். தூத்துக்குடி, கோவளம் ஆகிய இடங்களில் பெரும் உப்பளங்கள் நிறுவப் பட்டன. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டினர். கோவளம் (கோ அளம்) பெயர்க்க காரணமும் இதுதான்.

உப்பின் உற்பத்திற்குப் பின்னரே பதப் படுத்துதல் எனும் முறையே உருவானது. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்களில் உச்சானிக் கொம்பில் இருந்த தமிழர்கள் உப்பினைக் கொண்டு உணவினைப் பதப் படுத்தும் முறையைத் துவங்கினர். உப்பிற்கு நீரை உறிஞ்சும் திறன் உண்டு என்பதை அறிந்து, உணவுப் பொருளின் நீரினை உறிஞ்சி விட்டால் அதில் நுண்ணுயிர்கள் பெறுக வழி இல்லாமல் கெடாமல் இருக்கும் எனும் அறிவியல் அறிவின் விளைவாக ஊறுகாய், கருவாடு போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கினர். நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை ஊறுகாய்க்கு பயன்படுத்திய காரணம் அவற்றில் தண்ணீர்

குறைவாகவும், சிட்ரிக் அமிலம் அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் காய வைக்கத் தேவை இல்லை.

இது மிகப் பெரிய நாகரிக மாற்றத்தை உருவாக்கியது. பயணத்தின் பொது உணவுத் தேவையை நிறைவு செய்ய, வறட்சி காலங்களுக்கு உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ள என பெரும் வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்திய தருணம் இது. இன்றைய பெட்ரோல் போல அன்று உலகின் அதி முக்கிய வணிகப் பொருள் உப்பாக இருந்தது. அதன் வணிகம் பாண்டியர்களின் கையில் இருந்தது.

சங்க இலக்கியத்தில் உப்பு வணிகம்:

சேந்தன் பூதனார் பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப்பட்டுள்ளது.

“அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்

குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்

படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்

நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு” –  (அகம். 207: 1-6)

‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமை யான பாலை நில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத் தாய் புலம்புவதாக நீண்டு செல்லும்.

நெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாணிபத் தொழில் நடைபெற்றுள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதும், ஆழமானதுமான பண்பாட்டுக் குறியீடு.

உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கிய முதல் சமூகம் வாழ்வியலின் அடுத்த கட்டமாக சமையலை நோக்கி நகர்ந்தது. இன்று வரை பல நாடுகளில் உணவு வேகவைத்தல் எனும் நிலை தாண்டாத சூழலில் நாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சமையல் எனும் இடத்திற்கு நகர்ந்ததற்கான அடிப்படை உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் தான்.

சமையலில் புளியின் பங்கும் அதன் அறிவியல் நோக்கங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science) [Part 1/7]

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல் ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு nativespecial.com இன் நன்றிகள்.

“தமிழர் உணவின் அறிவியல்”- அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :