உணவு, கலை, இலக்கியம், விளையாட்டு என நம்ம ஊர் பாரம்பரிய அடிப்படைகளை ஆவணப்படுத்தும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக நம்ம ஊர் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகளை இந்த ஏட்டில் ஆவணப்படுத்தி உள்ளோம்.
வேட்டைச் சமூகமாக உணவினைச் சேகரித்து வாழ்ந்த குறிஞ்சி முல்லை நில மக்கள். மருத நிலத்தில், உணவு உற்பத்திச் சமூகமாக ஒரு இடத்தில் நிலை பெற்று வாழத் துவங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக தங்கள் விவசாயத்திற்கான உழைப்பிற்கும், உணவிற்கும், பாதுகாப்பிற்கும் பயன்பெறும் விலங்குகளை வளர்ப்பு விலங்குகள் ஆக்கினார்கள். அதாவது காடுகளில் இயற்க்கை தேர்ச்சி முறையில் பரிணாமம் அடைந்து வளர்ந்து வந்த பயிர்கள், செடிகள், விலங்குகள் அனைத்தையும் மக்கள் தமது சுயபராமரிப்பில், தனது கட்டுப்பாட்டில் வளர்க்கத் துவங்கினர். இதனை ஆங்கிலத்தில் “Domestication” என்று குறிக்கிறார்கள்.

காடுகளிலும், மலைகளிலும் இருந்த இயற்கைத் தேர்ச்சி (Natural Selection) முறை இங்கு இல்லாமல் போனது. அங்கு இயல்பில் பலமான மற்ற ஆண்களை வெல்லும் ஆண் மிருகமே கூடும் வாய்ப்பினைப் பெற்று அடுத்த தலைமுறைக்கு வித்திடுகிறது. ஆனால் மனிதன் சுயவளர்ப்பில் கொணர்ந்த விலங்குகளின் பெருக்கத்தில் இந்த இயற்கைத் தேர்ச்சி முறை இல்லாமல் போனதால் அவை பலவீனமாகத் துவங்கின. இதனைக் கையாளவே செயற்கையான தேர்ச்சி முறையினை முல்லை, மருத நில மக்கள் கையாளத் துவங்கினர். இதன் காரணமாகவே ஏறு தழுவுதல், கிடா முட்டு, சேவல் கட்டு போன்ற விளையாட்டுக்கள் நமது வாழ்வியலின் ஒரு பகுதியானது.

Image source: https://commons.wikimedia.org/wiki/File:Jallikattu_Folksport_05.jpg
இவ்விளையாட்டுக்களில் வெல்லும் பலமான விலங்குகள் மட்டுமே இணை சேர்க்கப்பட்டு அடுத்த தலைமுறையை உருவாக்கின. கூடவே போர்கள் இல்லாத காலகட்டங்களில் தமது போர் குணம் மழுங்காமல் இருக்க இவ்விளையாட்டுக்கள் பெரிதும் பயன்பட்டன.
குறிப்பாக தமிழர்கள் நிலைத்து வாழ துவங்கிய நிலப்பரப்பில் தமது முதன்மைத் தொழிலாக அவர்கள் கொண்டது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. இதில் தமது விவசாய தொழிலுக்கு உற்ற தோழமையாக இருக்கும் பசு மாடுகளுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். கூடவே அவற்றை தங்கள் உழவுத் தொழிலுக்கு பயன்படுத்த அதன் சிறந்த வகைகளை கடத்த பல விளையாட்டுக்களை வடிவமைத்தனர் அவற்றுள் இன்றளவும் ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரபலமாக மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருகிறது.
வாடி மஞ்சுவிரட்டு (அல்லது) ஜல்லிக்கட்டு:
“வாடிவாசல்” எனும் வாயில் வழியாக காளை திறந்துவிடப்படும். திறந்தவுடன் சீறிக்கொண்டு ஓடும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் செல்லவேண்டும் அப்படி சென்றால் அந்த வீரர் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் செல்வார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த காளைகள் கொண்டு வரப்பட்டு சல்லிக்கட்டு நடத்தப்படும்.
வேலி மஞ்சுவிரட்டு
இந்த வகை மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரபலமாகும். திறந்தவெளியில் காளையின் மூக்குக்கயிறை அவிழ்த்து விடுவார்கள், அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓடலாம், வீரர்கள் அதை அடக்கவேண்டும்.

Image source: https://commons.wikimedia.org/wiki/File:Jallikattu-Avaniapuram.jpg
வடம் மஞ்சுவிரட்டு
வடம் என்றால் தமிழில் “கயிறு” என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

1) காங்கேயம்
2) உம்பளச்சேரி
3) புலிக்குளம்
4) தேனி மலை மாடு
5) பர்கூர் மலை மாடு
6) ஆலம்பாடி (ஓசூர் கிருஷ்ணகிரி)
இதில் புலிக்குளம் வகை காளைகள் ஏறு தழுவலுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகிறது. காங்கேயம் காளைகளை விடவும் அதிக ஆக்ரோஷமுள்ள வகைகளாக புலிகுளம் காளைகள் அறியப்படுகின்றன.
இவற்றுள் ஆலம்பாடி வகைகள் மட்டும் இன்று தொடர்பற்று போய்விட்டன.
தமிழர்களின் வாழ்வியலில் ஆதி காலந்தொட்டு இருந்து வரும் இந்த வழக்கம் தமிழர்களின் ஏடுகளில் எண்ணற்ற இடங்களில் குறிப்பிடப் பெற்று வந்திருக்கின்றன அவற்றுள் மிக முக்கிய மேற்கோள்கள்,
1) சிந்து சமவெளி நாகரிகத்தில் உள்ள முத்திரையில் மிக உயிர்ப்புடன் ஒரு காளை தன்னை அடக்க வரும் வீரர்களை தூக்கி பந்தாடுவது போன்ற ஏறு தழுவுதல் காட்சி பாதிக்கப் பட்டிருக்கிறது
2) வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்’ (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.
3) கலித்தொகை:
“கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7”
4) குரவைக் கூத்து எனும் கலியாட்டம் சல்லிக்கட்டிற்கு முந்தைய நாளில் நடைபெறும் இதில் ஆண்கள் பெண்கள் சேர்ந்து நடனம் ஆடி கலிப்பர். அவ்வேளை தனது காதலனை காளைகள் அடக்க வேண்டி சீண்டி விளையாடுவர். அதேபோல் சல்லிக்கட்டிற்கு பிந்தைய நாளில் அதில் வென்றவனை புகழ்ந்து ஆடி பாடி மகிழ்வர்

இன்றைய சூழல்:
செழித்தோங்கிய தமிழர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்த ஏறு தழுவுதல் நிகழ்வு 2014 ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்டது. பல்லாயிரம் ஆண்டு தொடர்புடைய ஒரு நிகழ்வு தடை செய்யப்பட்டதினை தமிழர்கள் தங்களது மரபுத் தொடர்ச்சி மீது ஏவப்படும் மிகப்பெரும் போர் என்றே கருதினர். இதன் வெளிப்பாடாக 2017 ஆம் ஆண்டு தமிழகம் தழுவிய மிகப்பெரும் போராட்டம் இளைஞர்களால் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப் பட்டது. மிகப்பெரும் ஒழுங்கமைவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் உலக வரலாற்றில் பதிய பட வேண்டிய ஒரு நிகழ்வு. ஒரு இனம் தனது மரபுத் தொடர்ச்சியின் அங்கீகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தமிழர்கள் இந்த உலகிற்கு உணர்த்தினார். இந்த போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் இன்று ஏறு தழுவுதல் பொங்கல் காலங்களில் வெற்றி கரமாக அனைத்து பகுதிகளிலும் விழாக்கோலத்துடன் நடைபெற்று வருகிறது.
[newsletter_subscribe_list]