தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science)

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல் ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு netivespecial.com இன் நன்றிகள்.

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

0